“ஓடியாடி விளையாடு பாப்பா” நீங்கள் விளயாடினீர்கள் உங்கள் குழந்தைகள்?

பாரதி சொல் மறந்தோம் “ஓடியாடி விளையாடு பாப்பா”

‘இந்தப் பிள்ளையள் கொஞ்ச நேரமாவது பேசாமல் கிடக்குங்களா? 10 நிமிசம் இன்டவல் விட்டால் போதும் ஓடி விளையாடி கையைக் காலை உடைச்சுக் கொண்டு வந்து நிற்குதுங்கள்.’

கீழே விழுந்ததால் சின்ன உரசல் காயம் மட்டுமே அந்த மாணவனுக்கு. அவனைக் கூட்டி வந்த பாடசாலை ஆசிரியர்தான் கண்கள் கடுப்பாக, எரிச்சலுடன் அவ்வாறு குறைபட்டுக் கொண்டார்.

‘சும்மா கிடவெண்டால் கேக்கிறானே? வெய்யிலுக்கை விளையாடி காய்ச்சல் தேடிக் கொண்டு வந்து நிற்கிறான்.’

உண்மையில் வெயிலில் விளையாடியதால் காய்ச்சல் வரவில்லை. பக்கத்திலை இருந்த மாணவனிடமிருந்து தடிமன் தொத்தியிருக்க வேண்டும். பள்ளிக்கூடம் விட்டபின், வீடு வருவதற்கான வானுக்குள்ளை ஏறமுதல் ஒரு சில நிமிடங்கள் விளையாடியிருப்பான். அதுக்குத்தான் தாய் அவ்வளவு கடுப்பாயினாள்.

உண்மையில் இன்றைய பிள்ளைகளுக்கு போதிய விளையாட்டும் உடற் பயிற்சியும் கிடைக்கின்றனவா? ஆசிரியர்களும் பெற்றோர்களும் அதற்கான வாய்ப்பை, சூழ்நிலையை பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறார்களா?

 

காலையில் எழுந்தவுடன் சாப்பிடவும் நேரமின்றி பாடசாலைக்கு ஆலாய்ப் பறக்க வேண்டும். பாடசாலையால் வந்தவுடன் அவசர அவசரமாக விழுங்கிவிட்டு டியூசனுக்கு ஓட வேண்டும். பொழுதுபட பிரைவேட் டியூசன். பிறகு ஹோம் வேக் செய்ய நேரம் சரி. விளையாட நேரமே கிடையாது. சற்று நேரம் கிடைத்தால் கொம்பியூட்டர் முன் அல்லது ரீவீ பார்ப்பது. அவ்வளவே.

பாடசாலையில் உடற் பயிற்சி வகுப்புகள்

பாடசாலைகளில் விளையாட்டிற்கும், உடற் பயிற்சிக்கும் இடம் அற்றுப் போகிறது. வருட ஆரம்பத்தில் ஸ்போட்ஸ் மீட் எனப் பிள்ளைகளை ஒரிரு வாரங்கள் வாட்டி வதக்குவார்கள். அவ்வளவுதான். பிறகு ஒரு வருடத்தின் பின்னர்தான் மாணவர்களை மீண்டும் விளையாட்டு மைதானத்தில் இறக்குவார்கள்.

இது எங்கள் நாட்டுப் பிரச்சனை. மேலை நாடுகளில் படிப்பு இவ்வளவு நெருக்கடியானது அல்லவே. இருந்தபோதும் அங்கும் மாணவர்களுக்கு போதிய உடற் பயிற்சி கிடையாது என்கிறார்கள்.

Robert Wood Johnson Foundation  நிறுவனத்தால் ஒரு ஆய்வு அமெரிக்காவில் செய்யப்பட்டது. தினமும் உடற்கல்வி வகுப்புகள் பாடசாலைகளில் அவசியம் தேவை என்கிறது. அதனால் தினமும் பிள்ளையின் உடற் செயற்பாட்டை 23 நிமிடங்களால் அதிகரிக்க முடிகிறதாம்.

பாடசாலை விட்டு வீடு போனால் ‘மாலை முழுவதும் விளையாட்டு’ என பாரதியார் பாடியபடி விளையாடித் திரிந்த காலங்கள் உங்கள் ஞாபகத்திற்கு வருகிறதா? ‘எவ்வளவு நேரம் நாம் விளையாடினோம். இது போதாது’ என்றுதான் சொல்வீர்கள். உண்மைதான்.

இருந்தபோதும் அவர்களுக்கு நாளாந்தம் அவசியமான உடற் செயற்பாட்டில் மூன்றில் ஒரு பகுதியை பாடசாலை உடற் பயிற்சி வகுப்புகள் கொடுக்கும் என்கிறார்கள்.

தினமும் குறைந்தது 60 நிமிடநேர உடற் செயற்பாடு

தினமும் குறைந்தது 60 நிமிடநேர உடற் செயற்பாட்டில் இளம் சமூதாயத்தினர் ஈடுபட வேண்டும் என அமெரிக்க அரசின் வழிகாட்டி 2008ம் ஆண்டில் சொல்லியது. ஆனால் பதின்ம வயதினரில் 8 சதவிகிதமும், 8 முதல் வயதுடையோரில் 42 சதவிகிதத்தினரும் மட்டுமே அவ்வாறு செய்யக் கூடியதாக இருந்ததாம்.

ஆனால் இலங்கையில் அந்தளவு உடல் செயற்பாடாவது பிள்ளைகளுக்குக் கிடைக்கிறதா என்பது சந்தேகமே.

பிள்ளைகளின் உடற் செயற்பாட்டை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை அவர்கள் தெரிவித்தனர்.

 • ஏற்கனவே குறிப்பிட்டது போல உடற் பயிற்சி வகுப்புகள் 23 நிமிட செயற்பாட்டை அவர்களுக்கு அளிக்கும்.
 • விளையாட்டு மைதானத்திற்கு அல்லது அதற்கான மண்டபத்திற்கோ செல்லாமல் தங்கள் தங்கள் வகுப்பறையிலேயே செய்யக் கூடியவை 19 நிமிட உடற் செயற்பாடிற்கு இடம் அளிக்கும்.
 • பாடசாலைக்கு நடந்து அல்லது சைக்கிள் ஓட்டி வருவதால் 16 நிமிடங்கள் மேலதிகமாகக் கிடைக்கலாம்.
 • விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள் போன்றவற்றில் உள்ள விளையாட்டு உபகரணங்களைத் திருத்துவதும், புதிய உபகரணங்களை அமைப்பதாலும் பிள்ளைகளுக்கு மேலும் 12 நிமிடங்கள் கிடைக்குமாம்.
 • உடற் செயற்பாட்டிற்கான திட்டங்களை பாடசாலை படிப்பு நேரத்திற்குப் பின்னர் அறிமுகப்படுத்த வேண்டும். இதனால் 10 நிமிடங்கள் ஈடுபட முடியும் என்கிறார்கள்

இவற்றைப் பயன்படுத்தினால் பிள்ளைகளுக்கு சராசரியாக 58 நிமிட நேர உடற் பயற்சி கிடைக்கும் எனக் கூறுகிறார்கள்.

எல்லோருக்கும் அவசியம்

உடலுழைப்பு, உடற் பயிற்சி போன்ற செயற்பாடுகள் மனிதருக்கு மிக முக்கியமானவை. இவை இல்லாமல் உட்கார்ந்த இடத்தில் பொம்மையாக இயங்கும் வாழ்க்கை முறையால்தான் மாரடைப்பு, அஞ்சைனா போன்ற இருதய நோய்கள் ஏற்படுகின்றன. அத்துடன் அதீத எடை, பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. அத்துடன் குருதியில் நல்ல கொலஸ்டரோல் குறைவதற்கும் முக்கிய காரணம்
உடலுழைப்பற்ற வாழ்க்கை முறைதான்.

இவை யாவும் வளர்நத பின்னரே வெளிபடுமாயினும் அவற்றிக்கான அடித்தளம் இள வயதிலேயே ஆரம்பித்து விடுகிறது. அத்துடன் நீரிழிவு, அதீத எடை, உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை இப்பொழுது இளவயதினரிடமும் காண முடிகிறது. உடல் உழைப்பற்ற சோம்பேறியான குழந்தைகள் வளரும்போதும் அவ்வாறே இருப்பார்கள். எனவே நோயுடன் மல்லாடும் எதிர்காலமே அவர்களைக் காத்திருக்கும்

உங்கள் குழந்தைக்கு ஏன் அவசியம்

நோயற்ற வாழ்வு அவசியம். நீண்ட ஆயுள்; கிட்டுவதும், மாரடைப்பு போன்ற நோய்கள் வராமலிருப்பதும், விளையாட்டுடனும் உடற் பயிற்சிகளுடனும் தொடர்புடையன. இவற்றால் உடல் வலுப்பெறுகிறது. உளநிலை சிறக்கிறது. சமூகத்துடனான உறவும் நெருக்கமும் அதிகரிக்கின்றன. அத்துடன் அவர்களால்

 • தங்கள் எடை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியும்.
 • இரத்த அழுத்தம் அதிகரிப்பதைத் தடுக்க முடியும்.
 • நல்ல கொலஸ்டரோலான ர்னுடு லை அதிகரிக்க முடியும்.
 • நீரிழிவு ஏற்படுவதற்கான சாத்தியத்தைக் குறைக்கலாம்.
 • சில வகை புற்றுநோய்கள் ஏற்படுவதற்காக சாத்தியம் குறையும்.
 • மனநிலை உயரும், தன்னம்பிக்கை வளரும்.

நீங்கள் எவ்வாறு குழந்தைக்கு உதவலாம்?

எல்லாம் வாய்ப் பேச்சுடன் நின்றுவிடக் கூடாது. செயலில் இறங்க வேண்டும். அதற்கு பெற்றோரும் ஆசிரியர்களும் உதவ வேண்டும். வழிகாட்ட வேண்டும். உங்கள் உதவி எவ்வாறு அமையலாம். சில குறிப்புகள் இவை.

உடற் பயிற்சியிலும் உடல் உழைப்பிலும் ஈடுபடுவது பிள்ளைக்குத் தண்டனை போல இருக்கக் கூடாது. மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஆரம்பித்தால் நிச்சயம் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள்.

தாங்கள் முன்மாதிரியாக இவற்றில் ஈடுபட்டால் மட்டுமே குழந்தைகளும் ஆர்வம் ஏற்படும்.
விளையாட்டிலும் பொழுது போக்குவது போன்ற உடலுழைப்பிலும் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

விளையாட்டுக்கள் எப்பொழுதும் ஒரே விளையாட்டாக இருப்பதைவிட பல்வேறுவிதமான விளையாட்டுகளில் ஈடுபடுவது நல்லது. உதாரணமாக எப்பொழுதுமே கிரிக்கற் விளையாடுவதை விட பலவற்றிலும் மாறி மாறி ஈடுபட வேண்டும். இது மன மகிழ்ச்சிக்கானது மட்டுமல்ல. போட்டிகளிலும் ஓரே விளையாட்டிலும் ஈடுபடுபவர்கள் பல்வேறுவிதமான விளையாட்டுகளில் ஈடுபவர்களை விட அதிகமாகக் காயம்படுகிறார்கள் என அண்மைய ஆய்வு ஒன்று கூறியது.

விளையாட்டில் ஈடுபடுவதற்கான நேரத்தைக் கண்டுபிடிப்பது எப்படி? கொம்பியூட்டரில் விளையாடிக் கொண்டிருப்பது, ரீவீ முன் குந்தியிருப்பது, போனில் அலட்டிக் கொண்டிருப்பது போன்ற உடற் செயலூக்கம் இல்லாதவற்றைக் குறைப்பதின் மூலமே இது சாத்தியமாகும்.

இரண்டு வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு குழந்தையும் தினமும் குறைந்து 60 நிமிட நேரமாவது தமது உடலுக்கு வேலை கொடுக்க வேண்டும். அவை மகிழ்ச்சியளிகும் விளையாட்டுகளாக அல்லது, மிதமான உடற்செயற்பாடுகளாக இருக்கலாம். அவை அவர்களது வயதிற்கும் உடல் வளர்ச்சிக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும்.

ஒரே தடவையில் 60 நிமிடங்கள் முடியாதெனில், அதை இரண்டு மூன்று தடவைகளில் பிரித்துச் செய்யலாம்.

எவ்வாறாயினும் உங்கள் பிள்ளைகளை வீட்டிற்குள் அடைத்து வைக்காதீர்கள். பொம்மையாக மேசையின் முன் உட்கார வைக்காதீர்கள்.

பிள்ளைகளை ஓடியாடி விளையாட விடுங்கள். அறிவு வளர்ச்சி மட்டும் அவர்களுக்குப் போதாது. உடல் உறுதியாக வேண்டும்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பதைச் சொல்லியா தரவேண்டும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s