மார்கரட் தட்சர்

3980674-3x2-700x467எழுபதுகளின் இறுதியில் பிரிட்டனில் தொழிற்கட்சி ஆட்சியில் இருக்கிறது. இடதுசாரி கொள்கைகள் உச்சத்தில் இருந்த சமயம். நாட்டின் பொருளாதார நிலைமை மகா மோசம். பிரிட்டனின் சாம்ராஜ்யம் கொஞ்சம் கொஞ்சமாக ஒடிந்துபோய், வளம் என்பது அதன் எல்லைக்குள்ளேயே சுருங்கிவிட்டது. அரசுடைமையான மையப்படுத்தப்பட்ட நிறுவன அமைப்பு, இறுக்கமான சட்ட அமைப்பு என்று எல்லாமே வீண் செலவுகளுடன் அப்படியே இருக்கிறது. வரவுக்கு மீறிய செலவு. பணவீக்கம். மக்களும் அப்படியே. இரண்டாம் உலக யுத்தத்தின் போது உருவான வேலையில்லா திண்டாட்டாம் மக்கள் மனதில் ஆழமான எண்ணத்தை விதைத்துவிட்டது. எப்பாடுபட்டாவது ஒரு வேலையை தேடுதல் வேண்டும். அந்த வேலையிலேயே காலம் முழுக்க குப்பை கொட்டுதல் வேண்டும். ரிஸ்க் எடுத்தால் வேலை போய்விடும். தொழில் தொடங்கினால் எப்போது சரியும் என்று தெரியாது. வேலை முக்கியம். சங்கங்கள் ஆரம்பித்தனர். வேலையை காப்பாற்றிக்கொள்ள எல்லாவகை முயற்சிகளையும் செய்தார்கள். முன்னேற்றம் என்பது முதலைக்கொம்பானாது. ஆளாளுக்கு கப்பல் கட்டி தேசங்கள் தேடிய பிரிட்டன் கலாச்சாரம் ஒழிந்துவிட்டது. நிறுவனங்கள், தொழிற்சாலைகள் எல்லாம் தப்பினால் போதும் என்ற நிலை தான். விளைவு?

சம்பளஉயர்வு அரச துறையில் இல்லை என்று அறிவித்து விட, தொழிற்சங்கங்கள் கொதித்து எழுந்தன. எங்கேயும் வேலை நிறுத்தம். வைத்தியசாலை தொழிற்சங்கங்களில் இருந்து குப்பை அள்ளும் தொழிலாளர் வரை எல்லோருமே வேலை நிறுத்தம் செய்தார்கள். மயானத்தில் புதைகுழி தோண்டுபவர்கள் கூட மண்வெட்டியை தூர வீசிவிட்டார்கள். அந்த குளிர்பருவத்தில் மொத்த பிரிட்டனுமே நாறியது. “Winter Discontent” (குளிர்பருவ அதிருப்தி), என்கின்ற ஷேக்ஸ்பியரின் பிரபலமான வாக்கியத்தால் அந்த நிலைமையை குறிப்பிடுவார்கள்.

தேர்தல் வருகிறது. தாராளமய திறந்த பொருளாதார கொள்கைகளை முன்னிருத்தி கொன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சிக்கு வருகிறது. பிரதமராக மார்கரட் தட்சர். தட்சரின் கொள்கைகள் இலகுவானவை. ரிஸ்க் எடுப்பவர்கள், தொழில் முயற்சி செய்பவர்கள் தான் ஒரு நாட்டின் ஆதாரமான பொருளாதார வளங்கள். அவர்கள் இல்லாவிட்டால் அரசாங்கம் இயங்க முடியாது. ஏழை எளியவர்களுக்கும் உதவமுடியாது. தட்சர் ஆபிரகாம் லிங்கனின் இந்த வசனங்கள் எழுதப்பட்டிருந்த துண்டுச்சீட்டை எப்போதும் தன் கைப்பையில் வைத்திருப்பாராம்.

You cannot strengthen the weak by weakening the strong.
You cannot bring about prosperity by discouraging thrift.
You cannot help the wage-earner by pulling down the wage-payer.

இது முதலாளித்துவத்தின் அடிப்படை தத்துவம். தட்சருக்கு இன்னொரு பக்கமும் இருந்தது. வரவுக்கு மீறி செலவு செய்பவன், அதுவும் கடன் வாங்கி செலவு செய்பவன் ஒரு மகாபாவி என்பது அது. இந்த இரண்டு கொள்கைகளும் கலக்கும் புள்ளியை தான் Fiscal Policy என்பார்கள். அதன் தமிழ் எனக்கு தெரியாது.  ரொனால்ட் ரேகன் இதை வைத்தே அமெரிக்காவை இலாவகமாக நிமிர்த்தினார். தட்சரும் நிமிர்த்தினார். ஆனால் இலாவகமாக இல்லாமல் சுத்தியலால் அடித்து! அதனால் தான் அவரை இரும்பு பெண்மணி என்றழைக்கிறார்கள்.

தட்சரின் அப்பா ஒரு பலசரக்கு வியாபாரி. எந்த பொருளை கொள்முதல் செய்யலாம், தன வியாபாரத்துக்கு எவ்வளவு வங்கிக்கடன் வாங்கலாம், வியாபாரத்தை எப்படி பெருக்கலாம் என்ற பல வித யோசனைகளை சில்லரை வியாபாரத்தில் இருக்கும். அங்கே ஐஞ்சு லட்சம் ரூபாயை போட்டு ஒரு பொருளை வாங்குவது கூட ரிஸ்க் தான். சின்ன வயதில் கடையில் அப்பாவோடு இருந்து வியாபாரத்தை நோட்டம் விட்ட தட்சருக்கு இந்த விஷயங்கள் ஆழப்பதிந்துவிட்டன. கணவரும் ஒரு பிஸினஸ்காரன் தான். ஆட்சிக்கு வந்தபின் தட்சர் அந்த போஃர்மியூலாவையே கொஞ்சம் பரந்த அளவில் பயன்படுத்தினார்.

முதலில் செலவை கட்டுப்படுத்தினார். நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட நிவாரணங்கள் காலி. கூடவே நாணயமதிப்பை மிதக்கவிட, ஆரம்பத்தில் நிலைமை இன்னமும் மோசமானது. வேலையின்மை அதிகரித்தது. இது வேலைக்காகாது என்று இறுதியில் பல நிறுவனங்களை தனியார்மயப்படுத்தினார். தொழிற்சங்க சட்டங்களை மீள வரையறுத்தார். யாராவது ஸ்ட்ரைக் பண்ணுவதாக இருந்தால், முதலில் உறுப்பினர் மத்தியில் வாக்கெடுப்பு நிகழ்த்தி பெரும்பான்மை இருந்தால் மாத்திரமே ஸ்ட்ரைக் பண்ணலாம் என்ற சட்டம் அதில் முக்கியமானது. அதை எதிர்த்து ஒன்றிரண்டு ஸ்ட்ரைக் நிகழ்ந்தாலும் அதையும் அடக்கி ஆள, முதலீட்டாளர்களுக்கு பிரிட்டனில் நம்பிக்கை வர, பொருளாதாரம் கிடு கிடுவென வளர்ந்தது.

ரொனால்ட் ரேகனும், தட்சரும் நம்பிய, கடைப்பிடித்த Fiscal Policy அடுத்த முப்பது வருடங்களில் அனேகமான உலக நாடுகளை ஆட்கொண்டது எனலாம். வெற்றியும் பணவெறியும் பேராசையும் அதை அதள பாதாளத்துக்கு உலகை, குறிப்பாக மேற்குலகை கடந்த பத்தாண்டுகளாக கொண்டு சென்றாலும், அதை முதலாளித்துவத்தின் தோல்வியாக கொள்ளலாமா? என்றால் அது சந்தேகமே. கார்ல் மார்க்ஸ் சொன்ன முதலாளித்துவத்தில் உருவாகப்போகும் புரட்சி இன்னமும் வரவேயில்லை. காரணம் அதற்கான மாற்றீடுகள் இல்லாமையே. முதலாளித்துவத்தை சரியாக கடைப்பிடித்தால் தப்பிக்கலாம் என்று அவுஸ்திரேலியா, ஜெர்மனி, சுவிஸ் போன்ற நாடுகள் நிரூபித்திருக்கின்றன. அமேரிக்கா கூட குலைந்துவிடவில்லை. கொஞ்சம் ஆட்டம் கண்டிருக்கிறது. இது 92இலும் உருவானது. பில் கிளிண்டன் வந்து நிமிர்த்தினார். மீண்டும் புஷ் வந்து சொதப்பினார். மற்றும்படி இதை முதலாளித்துவத்தின் தோல்வி என்று அலறுவது வெறும் prejudice.

தட்சர் வட அயர்லாந்து போராட்டத்தை கொடூரமான முறையில் அடக்கியவர், ஆசிய குடிவரவை கடுமையாக எதிர்த்தவர், இனவாதி என்றெல்லாம் கறுப்புபக்கங்களை கொண்ட பெண் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் அதற்காக அவரை முற்றுமுழுதாக புறக்கணிக்க முடியாது. தட்சரை தொழிலாளர் வர்க்கத்தின் எதிரி, முதலாளித்துவத்தின் அடிமை அது இது என்று ஏச்சு பேசுபவர்கள் இருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் இறந்தபோது சிலர் கொண்டாடியிருக்கிறார்கள். பிரிட்டன் இன்றைக்கு இருக்கும் நிலையோடு 1979ம் ஆண்டை ஒப்பிட்டுப்பார்த்தால் தட்சரின் முக்கியத்துவம் புரியும்.  எப்படி செய்தார்கள் என்பதை விட என்ன செய்தார்கள் என்பதை வைத்தே தலைவர்களை சரித்திரம் தீர்மானிக்கிறது. தட்சர் இரும்புப்பெண்மணி தான்.  ஆனால் முக்கியமான தலைவர். அதுவும் எண்பதுகளில் பிரிட்டனுக்கும் உலகத்துக்கும் தேவைப்பட்ட தலைவர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s