புதிய போப்பாக அர்ஜென்டினா ஆர்ச் பிஷப் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தேர்வு: இனி போப் முதலாம் பிரான்சிஸ் அழைக்கப்படுவார்

புதிய போப்பாக அர்ஜென்டினாவின் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தேர்வு செய்யப்பட்டார். புதிய போப் இனி போப் முதலாம் பிரான்சிஸ் என அழைக்கப்படுவார்.

உடல் நிலையை காரணம் காட்டி, 16வது பெனடிக்ட், கடந்த மாதம் பதவி விலகியதால், புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக, வாடிகனின், சிஸ்டன் தேவாலயத்தில், 115 கார்டினல்கள் கூடி ரகசிய ஓட்டு பதிவை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, புதிய போப்தேர்வு செய்யப்பட்டு விடுவார், என்ற எதிர்ப்பார்ப்பில், ஏராளமான மக்கள், சிஸ்டைன் தேவாலயத்தின் வெளியே கூடி, புகைபோக்கியை ஆவலோடு பார்த்து காத்திருந்தனர். ஆனால், கரும்பு புகை வெளியேறியதால், புதிய போப் தேர்வு செய்யப்படவில்லை, என்பது தெரிந்தது.

 

கார்டினல்கள் நேற்று, மதிய உணவு இடைவேளைக்கு பிறகு கூடி, மீண்டும் ஓட்டு போட்டனர். இரண்டாவது முறையும், தேவாலய புகைபோக்கியில் கரும்புகை வெளியேறியது. புதிய போப் தேர்வு செய்யப்பட்டதற்கு அடையாளமாக வெண்புகை வெளியே வரும், என்ற எதிர்ப்பார்ப்பில், ஏராளமான கிறிஸ்துவர்கள், சிஸ்டைன் தேவாலயத்திற்கு அருகே காத்திருந்தனர். இத்தாலி நாட்டு கார்டினல் ஏஞ்சலோ ஸ்கோலா, பிரேசில் நாட்டின ஓடிலோ ஸ்கெரர், கனடா நாட்டின் மார்க் அவுலெட் ஆகியோர் புதிய போப்புக்கான பரிந்துரையில் உள்ளதாக கூறப்பட்டது.

 

இந்நிலையில், ‌புகைக்கூண்டிலிருந்து புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டதன் அடையாளமாக வெண்புகை வெளியேறியது. இதனால் அங்கு கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் குறித்த அறிவிப்பு முறைப்படி வெளியிடப்பட்டது.

 

இதன்படி, அர்‌ஜென்டினாவின் பியூனர்ஸ் அயர்ஸ் நகர ஆர்ச் பிஷப் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது வயது 76. லத்தீன் அமெரிக்காவிலிருந்து முதல் முறையாக போப் ஆண்டவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய போப் இனி, போப் முதலாம் பிரான்சிஸ் என அழைக்கப்படுவார்.

 

புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்ட பின்னர், அங்கு குழுமியிருந்த மக்களுக்கு ஆசி வழங்கி உரையாற்றிய போப் முதலாம் பிரான்சிஸ், உலக அமைதிக்காகவும், சகோதரத்துவம் தழைக்கவும் பிரார்த்தனை செய்வதாகவும், உலகம் முழுவதும் அமைதி மற்றும் ஒற்றுமை நிலவ வேண்டும் என கூறினார்.

 

புதிய போப் தேர்வு செய்யப்படுவது எப்படி

“கான்கிளேவ்’ எனப்படும் கார்டினல்களின் கூட்டத்தின் மூலம், புதிய போப் தேர்வு செய்யப்படுகிறார். ரோமன் கத்தோலிக்கர்களின் தலைவராக, புனிதமாக போப் மதிக்கப்படுகிறார். அவரை தேர்வு செய்யும் முறை பழைமையானது. இந்த முறையை, 1274ம் ஆண்டு போப் பத்தாம் கிரிகோரி என்பவர் தோற்றுவித்தார். போப்பாக இருப்பவர் இறந்தாலோ, பதவி விலகினாலோ அந்த இடம் காலியாகிவிடும். அடுத்தவரை தேர்வு செய்யும் வரை, அந்த இடம் “வெற்று அரியணை’ என அழைக்கப்படும். இக்காலகட்டத்தில் புதிய போப்பை தேர்வு செய்ய, “கான்கிளேவ்’ கூட்டப்படும். உலகம் முழுவதிலும் உள்ள கார்டினல்களுக்கு, அழைப்பு அனுப்பப்படும். ஓட்டளிக்க ஒன்றுகூடும் கார்டினல்களின் வயது 80க்குள் இருக்க வேண்டும். போப் தேர்தலில், வேட்பாளர் பெயர் முன்னரே அறிவிக்கப்பட மாட்டாது. வாடிகனில் ரகசியமாக சிஸ்டைன் சிற்றாலயத்தில் கூடும் “கான்கிளேவ்’ கூட்டத்தில், பிடித்தவருக்கு கார்டினல்கள் ஓட்டளிப்பர். மூன்றில் இரண்டு பங்கு ஓட்டு பெறுபவர் புதிய போப் ஆகலாம். ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றவரிடம் கருத்து கேட்கப்படும். அவர் ஒத்துக்கொண்டால் போப்பாக தேர்தெடுக்கப்படுவார். புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டால், சிஸ்டைன் சிற்றாலயத்தின் புகைபோக்கி வழியே வெண்புகை வெளியிடப்படும். ஒருவருக்கு பெரும் பான்மை கிடைக்காவிட்டாலோ, தேர்வு செய்யப்பட்டவர் பதவியை மறுத்தாலோ கரும்புகை வெளியிடப்படும். “கான்கிளேவ்’ கூட்டம் நடக்கும் போது, சிஸ்டைன் சிற்றாலயத்தில் வெளியுலக தொடர்பு துண்டிக்கப்படும். புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும்வரை இக்கட்டுப்பாடு இருக்கும். மூன்று நாட்களுக்குள் முடிவு எட்டப்படாவிட்டால், ஒரு நாள் இடைவெளி விட்டு மீண்டும் ஓட்டெடுப்பு நடக்கும். ஒருவர் பெரும்பான்மை ஓட்டுகளை பெற்று போப் ஆண்டவராக சம்மதம் தெரிவித்தால், தனது பெயரை தானே தேர்வு செய்வார். போப் ஆன பின், பெயரை மாற்றிக் கொள்வது வழக்கத்தில் உள்ளது. பின் போப்புக்கான பாரம்பரிய ஆடைகளுடன், வாடிகன் தேவாலயத்தில் தோன்றி முதல் செய்தியை மக்களுக்கு வழங்குவார். போப் ஆண்டவர்: ஏசு கிறிஸ்து விண்ணுலகம் செல்லும் முன், கிறிஸ்தவர்களை வழிநடத்தும் பொறுப்பை முதன்மை சீடர் புனித பீட்டரிடம் ஒப்படைத்தார். புனித பீட்டரின் கல்லறையின் மீதுதான், வாடிகன் தேவாலயம் அமைந்துள்ளது. புனித பீட்டரிடம் ஏசு கிறஸ்து ஒப்படைத்த பணியை, அவரது வாரிசாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரோம் நகர ஆயர்கள் செய்து வந்தனர். இவர்களில் முதன்மையானவரே போப் என அழைக்கப்படுகிறார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s