பொங்கலோ, பொங்கல்! – கோரிக்கை பொங்கல் இது!!

1

‘‘தமிழன் என்றோர் இனம் உண்டு, தனியே அவர்க்கோர் குணம் உண்டு‘‘ என்று பாடினார், நாமக்கல் கவிஞர். எல்லா வகையிலும், தமிழன் தனிச்சிறப்பு வாய்ந்தவனாகத்தான் வாழ்ந்து வந்திருக்கிறான். நாட்டிலுள்ள ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் மதவழிபாட்டுக்கேற்ப, தனித்தனியாக பண்டிகைகளை கொண்டாடுவார்கள். ஆனால், தமிழ்நாட்டில் அனைத்து மதத்தினரும், ஏன் கடவுள் நம்பிக்கையில்லாத பகுத்தறிவாளர்களும் சேர்ந்து ஒன்றாக கொண்டாடும் ஒரே பண்டிகை பொங்கல் திருநாளாகும். பண்டைய காலத்தில் இருந்து விவசாயம்தான் தமிழர்களின் வாழ்வாதாரமாக திகழ்ந்திருக்கிறது. கிராமப்புறங்களில் இன்றும் பொங்கலின் தாக்கத்தை பார்க்கமுடிகிறது. பொதுவாகவே தமிழன் நன்றி உணர்வு உள்ளவன். தனக்கு யாரொருவர் கையளவு உதவிசெய்தாலும், கடலளவு நன்றிதெரிவிக்கும் உன்னதமான குணத்திற்கு சொந்தக்காரன். அந்த வகையில்தான், தன்னுடைய வேளாண்தொழிலுக்கு உதவியாக இருந்த இயற்கை-சூரியன், மழை, ஏன் துணைபுரிந்த மாடுகளுக்கும் நன்றி தெரிவிப்பதற்காக கொண்டாடிய நாள்தான் பொங்கல்.

பொங்கல் என்பது அறுவடை திருவிழா. பணிவிடை செய்தவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் திருவிழா. தமிழன் அன்றே கொண்டாடிய மே தினம். மேழி செல்வத்திற்கும் நாம் அன்பை அளிக்கும் உயர்ந்த பண்டிகை. மனிதன் தனக்கு உணவையும், உடையையும் தருகின்ற இயற்கையின் அம்சங்களுக்கு வணக்கத்தை தரும் சிறந்த பண்டிகை. எல்லா ஊர்களிலும் அறுவடை திருநாள் உண்டு. ஆனால் அது நம் ஊரில் நடப்பதைப்போல எங்கும் இருப்பதில்லை. இங்குதான் பழையவற்றை கழிக்கிறோம், புதியவற்றை புகுத்துகிறோம். நாம் அவற்றை செய்கிறவர்களுக்கு எல்லாம் வாழ்வாதாரம் வழங்குகிறோம். வெள்ளையடிப்பவருக்கும், பாய் முனைபவருக்கும், முறம் செய்பவருக்கும் புதுவாழ்வு, நாம் போகி கொண்டாடும்போது கிடைக்கிறது. நாம் கழிப்பதால் அவர்கள் மகிழ்ச்சியை கூட்டிக்கொள்கிறார்கள். தானியங்கள் திரள வெளிச்சம்தந்த சூரியனுக்கும், காற்றுக்கும், உருவாக்கித்தந்த மண்ணுக்கும் முதல் மரியாதை பொங்கலன்று செலுத்துகிறார்கள். அன்று வாசலில் பொங்கலிட்டு, நாம் குத்தித்தீட்டிய அரிசியில் வெல்லம், ஏலம், திராட்சை, நெய் ஆகியவற்றை கலந்து இனி வாழ்வே இனிக்கும் என்று தை பிறந்ததை கொண்டாடுவோம். அடுத்தநாள் கழனியில் உழைத்த காளைக்கும், பால் தந்த பசுவுக்கும் கொம்பு அலங்கரித்து, பூமாலை சூடி, ஆரத்தி எடுத்து வணங்குகிறோம். அடுத்தநாள் சகோதரர்களுக்கு பெண்கள் புகுந்த வீட்டில் வழிபாடு செய்து பொங்கலிடுகிறார்கள்.

இந்த அளவு உள்ளத்தில் பெருக்கெடுத்து ஓடும் உவகையோடு கொண்டாடப்பட வேண்டிய பொங்கல் திருநாள் இந்த ஆண்டு அவ்வளவு மகிழ்ச்சியை அளிக்கவில்லை என்பதை யாரும் மறுத்துவிடமுடியாது. காரணம் பருவமழை பொய்த்துவிட்டது. காவிரி வறண்டு போய்விட்டது. மக்கள் வேதனையோடு இருந்தாலும், மகிழ்ச்சியை வரவழைத்து கொண்டாடுகிறார்கள். குறுவை சாகுபடியும் பொய்த்து சம்பா, தாளடியும் கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், இது ஒன்றாவது ஆறுதல் என்ற நிலையில், தன் குடும்பத்தாரை மகிழ்விக்க விவசாயி இந்த ஆண்டு பொங்கல் கொண்டாடினாலும், இதை ஒரு கோரிக்கை பொங்கலாக வைத்துள்ளான். எப்படியும் மழை நீரையும், ஆற்று நீரையும் நம்பித்தான் விவசாயம் செய்ய வேண்டிய கட்டாயநிலை விவசாயிக்கு உண்டு. இந்தியாவில் ஒரு பக்கம் பெருவெள்ளத்தால் ஆண்டுதோறும் பாதிக்கப்பட்டு, மறுபுறம் தண்ணீர் இல்லாமல் வறட்சியால் வாடும் நிலையை மனதில் கொண்டுதான் 2002ம் ஆண்டு ஆகஸ்டு 14ந் தேதி சுதந்திரதின விழா உரையாற்றிய அப்துல்கலாம், இதுதொடர்பாக ஒரு தீர்வுகண்டாக வேண்டிய கட்டாயத்தை குறிப்பிட்டார். பிரதமராக இருந்த வாஜ்பாய் இதைத்தொடர்ந்து இந்தியாவில் உள்ள அனைத்து ஆறுகளையும் இணைக்க ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் கோடி செலவிலான திட்டத்தை வகுத்தார். ஆனால், அந்த திட்டத்திற்கு இப்போது உயிரில்லாமல் போய்விட்டது.

இப்போதுள்ள உடனடி தேவையில் இந்த திட்டத்திற்கு முன்னோடியாக தென்னக ஆறுகளை இணைக்கும் ஒரு திட்டத்தை மத்திய அரசாங்கம் வகுக்க, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக குரல்கொடுத்து நிறைவேற்றவேண்டும். பெய்கிற சிறுமழை தண்ணீரையும் வீணாக்காத வகையில், தமிழ்நாட்டிலுள்ள 17 சிறு சிறு ஆறுகளையாவது இணைக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பு திட்டத்தை இன்னும் முழுமையாக செயல்படுத்த வேண்டும். வறண்டுபோயிருக்கும் அணைகள், ஆறுகள், கால்வாய்கள், ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படவேண்டும். ஆறுகளில் ஆங்காங்கே தடுப்பணைகளை கட்டவேண்டும். ஏராளமாக மரங்கள் நடப்பட வேண்டும். இதுதான் இந்த பொங்கல் நன்னாளில் எதிர்காலத்தை மனதில் நினைத்து விவசாயிகள் விடுக்கும் கோரிக்கையாகும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s