மாநிறமா மயங்க வேண்டாம்…கறுப்பு நிறமா கலங்க வேண்டாம்….

வெள்ளை வெளேர் அழகிகளையே விஞ்சுகிற அளவுக்கு கருப்பு அழகிகள் கலக்கத் தொடங்கிவிட்டார்கள். ஓபாமாகூட இரண்டாவது முறையாக அமெரிக்க தேசத்தின் அதிபராகி இருக்கிறார். அதனால், பழையபடி ‘கருப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு!’ பாடலைச் சுட்டிக்காட்டி கருப்பு நிறப் பெருமைகளை சொல்ல வேண்டிய அவசியம் இனியும் இல்லை. ஆனாலும், நம்மில் பலருக்கும் சிவப்பு அல்லது வெள்ளை நிறத் தோலின்மீது எப்போதுமே தீராத ஒரு கிறக்கம். குறிப்பாகப் பெண்கள் சிவப்பாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். கருப்பு நிறக் கதாநாயகர்களை மனம் உவந்து ஏற்றுக் கொள்ளும் ரசிக மகா ஜனங்களுக்கு, கதாநாயகிகள் மட்டும் ‘செக்கச் செவேல்’ என்று இருந்தாக வேண்டும். ஆனால் மேலை நாட்டவர்களுக்கோ தங்களின் வெள்ளை வெளேர் நிறம் பிடிப்பதில்லை. அதைக் கருப்பாக்கிக் கொள்வதற்காகக் கடற்கரைகளில் சூரிய ஒளியில் புரளுகிறார்கள். இதை ‘டானிங்’ என்றும் (Tanning) சூரியக் குளியல் (Sun bath) என்றும் சொல்லிக்கொள்கிறார்கள்.
நம்மவர்களில் பலர் தாங்கள் மாநிறமாக இருப்பதாகவோ அல்லது கருப்பு நிறம் கொண்டவர்களாக இருப்பதாகவோ நினைத்து லேசான மன உளைச்சலுடனே இருக்கிறார்கள். சந்தையில் விற்கப்படும் பலவிதமான, சரும நிறத்தை மாற்றும் (Fairness Cream) கிரீம்களையும் அள்ளிப் பூசிக்கொள்கிறார்கள். அடுத்த நாளே நிறம் மாறிவிட்டோமா? என்று கண்ணாடி முன் நின்று ஆராய்ச்சி செய்கிறார்கள்.
சரி! தோலின் நிறத்தில் ஏன் இத்தனை வேறுபாடுகள்? கிரீம்கள் உண்மையிலேயே தோலைச் சிவப்பாக்கிவிடுமா? பிறக்கப்போகும் குழந்தை சிவப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகக் கருவுற்ற பெண்கள் குங்குமப்பூவைச் சாப்பிடுவது எந்த அளவுக்குப் பலன் தரும்? என்பன போன்ற அலையடிக்கும் கேள்விகளுக்குப் பதில் அளித்தார் சென்னை மருத்துவக் கல்லூரியின் முதுநிலை உதவிப் பேராசிரியர் டாக்டர் வி.என்.எஸ்.அகமது சரீஃப்.
”மனிதர்களின் தோலின் நிறத்தை நிர்ணயிப்பது தோலில் இருக்கும் ‘மெலனின்’ என்ற நிறமிகள்தான். மெலனின் அதிகம் உள்ளவர்கள் கருப்பாகவும் மெலனின் அளவு குறைந்தவர்கள் வெளுப்பாகவும் இருப்பார்கள். உடம்பில்கூட வெயில் படுகின்ற இடங்களுக்கும், எப்போதும் ஆடையால் மூடப்பட்டிருக்கும் பாகங்களுக்கும் நிற வேறுபாடு இருப்பதைப் பார்க்கலாம்.
தோலின் கீழ் அடுக்கில் உள்ள ‘மெலனோஸைட்’ (Melanocytes) என்னும் வகையைச் சேர்ந்த செல்கள்தான் மெலனினை உற்பத்தி செய்கின்றன. இந்த மெலனின்தான் சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் தோலுக்குள் ஊடுருவும் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. இவை அதிகமாகும்போது தோலுக்குக் கெடுதல் விளைவிக்கக்கூடும். மெலனின் உற்பத்தி குறைவானவர்களுக்குத் தோல் நோய்கள் வரும் வாய்ப்புகளும் அதிகம். தோல் புற்றுநோய்கூட வர வாய்ப்பு உண்டு. சுருக்கமாகச் சொன்னால் வெள்ளையாக இருப்பவர்களைவிடக் கருப்பாக இருப்பவர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு இயற்கையிலேயே அளிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் புற ஊதாக் கதிர்கள் உடலில் உள்ள ‘ஃபோலிக்’ அமிலத்துடன் வினைபுரிந்து, அமிலத்தைச் சேதப்படுத்தி, பல கெடுதல்களை உடலுக்கு ஏற்படுத்துவதாகவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. நண்பகல் நேரத்தில் புற உதாக் கதிர்கள் மிக அதிகமாக ஊடுருவும் வாய்ப்பு இருப்பதால், எந்த நிறத்தவர்களாக இருந்தாலும் அப்போது சூரிய ஒளி படும்படியாக அதிக நேரம் இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. தொப்பி, முழுக்கைச் சட்டை போன்றவற்றை அணிவதும் நல்லது. குடையையும் பயன்படுத்தலாம்.”
சிவப்பழகைத் தருமா ஃபேர்னெஸ் கிரீம்கள்?
பல கிரீம்களில் ஸ்டீராய்டு மருந்துகளைக் கலந்திருப்பார்கள். இவை ஆரம்பத்தில் ஓரளவு பயன் தரலாம். தரம் குறைந்த கிரீம்கள் நேரடியாகத் தோலில் ஒவ்வாமையை ஏற்படுத்திவிடக் கூடும். இன்னும் சில, மெலனின் உற்பத்தியைக் குறைக்கும் அல்லது நிறுத்திவிடும். மெலனின் குறைந்தாலே தோல் வெளுக்கும்தானே! ஆனால் இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தினால் சருமத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடும். மேலும் முன்பிருந்த நிறம் மாறி மிகவும் கருப்பாக ஆகிவிடவும் வாய்ப்பு உண்டு. அந்த நிலைமைக்கு ‘ஆக்ரொனோசிஸ்’ (Ochronosis) என்று பெயர். இதைக் குணப்படுத்துவது கடினம்.
கருவுற்ற பெண்கள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமா?
குங்குமப் பூவைச் சாப்பிடுவதற்கும் குழந்தை சிவப்பாகப் பிறப்பதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. ஆனாலும் குங்குமப்பூவில் இரும்புச் சத்து இருக்கிறது. அதைச் சாப்பிடுவது கருவுற்ற பெண்களுக்கு நல்லதுதான். மேலும் குங்குமப்பூவிலும் நிறையக் கலப்படம் செய்து செயற்கைச் சாயம் ஏற்றிச் சந்தையில் விற்கிறார்கள். எனவே நம்பகமான கடைகளில் கலப்படம் இல்லாத குங்குமப்பூவை வாங்கிப் பயன்படுத்துவதே நல்லது.”
சரி! கலப்படம் இல்லாத குங்குமப்பூவை எப்படிக் கண்டுபிடிப்பது?
ஐஎஸ்ஓ 3632 தரச் சான்று பெற்ற குங்குமப்பூ விற்பனை செய்யும் ரவிஷங்கர் பாபு கொடுக்கும் அறிவுரை இது.
”ரொம்ப சிம்பிள்! சூடான பாலில் சிறிதளவு குங்குமப்பூவைக் கொட்டுங்கள். உடனடியாகச் சிவப்பு நிறம் வந்தால் அது போலி. ரசாயனப் பொருட்களைச் சேர்த்திருக்கிறார்கள் என்று அர்த்தம். தங்க நிறம் (கோல்டன் யெல்லோ) கொஞ்சம் கொஞ்சமாக நீண்ட நேரம் வந்துகொண்டே இருந்தால் அதுதான் அசல் குங்குமப்பூ! அசலிலும் சுமார் 18 மணி நேரம் கழித்துப் பார்க்கும்போது அடர்த்தியாகத் தங்க நிறம் இருந்தால் அதுதான் பெஸ்ட். இன்றைய நிலவரப்படி தரமான குங்குமப்பூ ஒரு கிராம் ரூ.600க்கு விற்கப்படுகிறது!”
பண்டைய எகிப்து, கிரேக்கம் மற்றும் ரோமாபுரி ஆகிய நாடுகளில் தோலின் நிறம் சமூக அந்தஸ்தை நிர்ணயிக்கும் காரணியாக ஒருபோதும் எடுத்துக்கொள்ளப்பட்டதே இல்லை. கருப்பு நிறம் என்பது உழைப்பாளிகளின் அடையாளமாகவே பலராலும் பார்க்கப்படுகிறது. தாங்கள் கருப்பாக இருக்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மை தேவையே இல்லை. பல நாடுகளில் தோலின் நிறத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதும் இல்லை. சாதனையாளர்களில் பலரும் கருப்பு நிறம் கொண்டவர்களே! முன்னாள் முதலமைச்சர்களான பெருந்தலைவர் காமராசரும் அறிஞர் அண்ணாதுரையும் கருப்பு நிறம் கொண்டவர்களே! நடிகர்களில்கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கருப்பு நிறம் கொண்டவர்தான். இன்னும் ஏராளமானவர்களை உதாரணம் காட்டலாம். இடப் பற்றாக்குறை காரணமாக இத்துடன் நிறுத்துகிறோம். ‘என்னை ஏன் விட்டுவிட்டீர்கள்?’ என்று யாரும் முஷ்டியை உயர்த்தி, நாக்கைத் துருத்திக் கொண்டு சண்டைக்கு வந்துவிடாதீர்கள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s