குளிர் காலத்தை சமாளிப்பது எப்படி?

தற்கும் பயப்படாதவர்களைப் பார்த்து, ‘குளிர் விட்டுப் போச்சு’ என்பார்கள். ஆனால், குளிரைப் பார்த்தே பயப்படுகிறவர்களைப் பார்த்து என்ன சொல்வது? நீண்ட கோடை, மிகக் குறுகிய மழைக்காலம், மிதமான குளிர்காலம் கொண்ட மாநிலம்தான் தமிழ்நாடு. ஆனாலும், மார்கழிக் குளிரைப் பார்த்து இங்கு நிறையப் பேர் நடுங்குவார்கள். ஒவ்வாமை மற்றும் சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் அதிகமாகவே பாதிக்கப்படுவார்கள். இந்தக் குளிர் காலத்தில் சளி, தும்மல், இருமல், தலைவலி என்று அடுக்கடுக்காகப் பிரச்னைகள் படை எடுத்து வரும். நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள், குழந்தைகள், மற்றும் வயதானவர்களைத் தொற்று நோய்கள் எளிதில் தாக்கும். இந்தப் படை எடுப்புகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி? மதுரையைச் சேர்ந்த ‘காது மூக்கு தொண்டை’ மருத்துவர் அருள் விரிவாக விளக்கினார்.
சளி, இருமல், ஆஸ்துமா:
”அதிகாலைப் பனியால் சிலருக்கு மூச்சுத் திணறல், சளி, மூக்கடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும். வைட்டமின் சி உள்ள உணவுகளைச் சாப்பிட்டு வர ஜலதோஷத்தில் இருந்து நம் உடலைத் தற்காத்துக் கொள்ளலாம்.
அடுத்து, இந்த சீசனில் சிறுவர் முதல் பெரியவர் வரை கண்கள் சிவக்க இருமியபடியே இருப்பார்கள். தொண்டை வறண்டு போவதாலும் இருமல் வரும். சளி இருமல் தொல்லையின் அடுத்த கட்டமாகக் குரல்வளையில் வீக்கம் ஏற்பட்டு, அதனால் தொண்டைக் கரகரப்புடன் பேச முடியாத நிலை ஏற்படும். கஷ்டப்பட்டுப் பேசினாலும் காற்றுதான் வரும். மருந்து மாத்திரை எடுத்துக் கொள்வதுடன் அதிகம் பேசுவதையும் தவிர்த்தால் விரைவில் குணமடையலாம்.
குளிர் காலத்தில் தூசி, மகரந்தம் போன்றவற்றின் மூலமாக ஒவ்வாமை ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும் முக்கியம். பூனை, நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகள் குளிர் காரணமாக வீட்டுக்குள் வந்துவிடும். சிலர் குளிருக்கு அடக்கமாக வீட்டுக்குள் புகைப்பார்கள். அந்தப் புகையும் மற்றவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடும். ஒவ்வாமையால் ஆஸ்துமா வரவும் வாய்ப்பு உண்டு. ஆஸ்துமா வந்துவிட்டால் மீண்டும் மீண்டும் தாக்கும். தனிக் கவனத்துடன் சிகிச்சை எடுத்தால் மட்டுமே நோயின் தீவிரம் குறையும்.
மேற்சொன்ன பிரச்னைகளை எதிர்கொள்ள இந்த சீசனுக்குத் தேவையான சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும். குளிர் காலத்தில் அவ்வளவாகத் தாகம் எடுக்காது. ஆனாலும், போதிய அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுப் பொருட்களை அப்படியே சாப்பிடுவதைத் தவிர்த்து அறையின் தட்பவெட்பத்துக்கு அவை வந்ததும் சாப்பிட வேண்டும். ஜலதோஷத்தையும் இருமலையும் நோய் எதிர்ப்பு மாத்திரைகளால் எளிதில் குணப்படுத்திவிடலாம். மூக்கில் நீர்வடிதலுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ‘நாசில்ஸ் ஸ்பிரே’ உபயோகிக்கலாம். ஆஸ்துமாவுக்கு நவீன சிகிச்சைகளும் இன்ஹேலர்களும் வந்துவிட்டன.
சைனஸ்:
பனிக்காலத்தில் ஏற்படும் சளிப் பிரச்னையை அலட்சியப்படுத்தினால் அது சைனசஸாக உருவெடுத்துவிடலாம். மூக்கு அடைபட்டு, மூக்கின் அருகில் உள்ள காற்று அறைகளில் நீர் தேங்குவதால் சைனஸ் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் கண்களைச் சுற்றி வலி, கன்ன எலும்புகளில் வலி, தலைவலி ஆகியன ஏற்படும். இயல்பாக சுவாசிக்க முடியாது; சரிவரப் பேசவும் முடியாது; தலை பாரமாக இருக்கும்; குனியும் போதும் நிமிரும் போதும் தலை வலிக்கும். மூக்கு அடிக்கடி அடைத்துக் கொள்வதால் வாசனை தெரியாது. ருசியையும் உணர முடியாது.
‘என்டோஸ்கோப்பி’ சிகிச்சை மூலம் மூடப்பட்ட சைனஸ் அறைகளைத் திறந்து உள்ளே இருக்கும் நீரை வெளியேற்றி சைனஸைக் குணப்படுத்தலாம்.
சிகிச்சைக்குப் பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் சைனஸ் நோய் வரலாம். எனவே நம் உடம்பை நன்கு கவனித்துக் கொள்வதுடன் நோய்கள் தாக்கும் முன் தற்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதும் அவசியம்.
டான்சில்:
டான்சில் என்பது நம் வாயின் உள்ளே இருபக்கங்களிலும் உள்ள இயற்கையான சதை. நோய் எதிர்ப்புச் சக்திக்குப் பயன்படுவதால் அதை வாயில் காவலன் என்றுகூடக் குறிப்பிடலாம். உலர்வாக உள்ள வாயினுள் கிருமிகள் அதிக நேரம் தங்குவதால் நோய்த்தொற்று ஏற்பட்டு அப்பகுதி வீங்கி வலியை ஏற்படுத்தும். அறுவை சிகிச்சை இன்றி மாத்திரைகளால் இதைக் குணப்படுத்திவிடலாம்.
காது வலி:
தொற்றுநோய்களின் மூலம் காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்நிலையில் காது சுத்தமாக அடைத்துவிடும். சளியினால் ஏற்படும் சுவாசத் தொற்றுகளின் வழியாகவே காது பாதிப்புக்கு உள்ளாகும். இரவு நேரத்தில் காதில் தீவிர வலி ஏற்படும். சில சமயம் நடுக் காதில் திரவத் தேக்கம் ஏற்பட்டு பாக்டீரியா அதிகமாகப் பெருகும் சூழல் குளிர்காலத்தில் அதிகம் இருக்கும். பனிக்காலத்தில் வயதானவர்கள் அதிகாலையில் வாக்கிங் போவதைத் தவிர்க்கலாம். அல்லது குளிர் தாக்காத வகையில் மஃப்ளர், ஸ்வெட்டர் அணிந்து நடக்கலாம்.
தொண்டை வலி:
நாம் குடிக்கும் தண்ணீர் சுத்தமானதாக இல்லாவிட்டால் தொண்டையில் நோய்த்தொற்று ஏற்பட்டு, தொண்டைக் கட்டிக்கொள்ளும். இருமலும், வலியும் உண்டாகி, பேசுவதில் சிரமம் இருக்கும். இது தொடர்ந்தால் காய்ச்சலுடன் தொண்டை வலி, மூக்கு அடைப்பு, கண்ணில் நீர் வடிதல் போன்ற பிரச்னைகளும் ஏற்படும்.
சிலர் தொழில்ரீதியாக நிறையப் பேச வேண்டியவர்களாக இருப்பார்கள். அவர்களுக்குக் குரலே பிரதானம். அவர்கள் குரலை முறையாகப் பயன்படுத்த வேண்டும். அடி வயிற்றில் இருந்து காற்று வருவதைப்போல சுவாசத்தைப் பயன்படுத்தினால் பாதிப்பு இருக்காது; தொண்டையில் இருந்து காற்று வந்தால் நிச்சயம் பாதிப்பு இருக்கும். பிரணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால் குரல் பிரச்னைகள் குறையும்.
டான்சிலைத் தவிர்க்கச் சில வழிகள்:
அதிக சூடாகவோ, குளிர்ச்சியாகவோ உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்ளக் கூடாது.
சிகரெட், பான்பராக், பாக்கு போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
புகை பிடிக்கும் நபர்களின் அருகில்கூட நிற்க வேண்டாம்.
நீண்ட நேரம் பேசுகிற சந்தர்ப்பங்களில் இடையிடையே தண்ணீர் குடிக்க வேண்டும். கழுத்து நரம்புகள் புடைக்கும் அளவுக்குச் சத்தமாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
ஒருநாளைக்கு இரு முறையாவது பற்களைச் சுத்தம் செய்ய வேண்டும்.
நன்றி. விகடன்.காம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s