வெளிச்சம் தந்த மின்வெட்டு !!!

மின்வெட்டால் ஏற்படும் பாதிப்புகள் சொல்லில் அடங்காது. இருளிலிருந்து வெளிச்சத்தை காணவரும் சிசுக்கள் முதல் மண்ணில் புதைபவர்கள் வரை அனைவருக்கும் ஏராளாமான அவதிகள். ஏன் நமது பதிவுலகிலேயே பதிவுகளின் எண்ணிக்கை இந்த மின்சார தடையினால் குறைந்து தான் போயுள்ளது. தொடர் மின்வெட்டால் நோயாளிகளும், முதியவர் களும், குழந்தைகளும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.தேர்வு நேரமாக உள்ளதால் மாணவர்களுக்கும் சரியாக படிக்க முடியாமல் திணறுகின்றனர். தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பால் பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் இரவு நேர திருட்டு , வழிப்பறி என வெகுவாக நாம் பாதிக்கப்பட்டுள்ளோம்.

ஆனால் இத்தனை பாதிப்பை தந்துள்ள இந்த மின்வெட்டால் சில நன்மைகளும் உள்ளது என்றால் ஆச்சரியம் அல்லவா? தொடருங்கள்…

நம் முன்னோர்கள் போற்றி பாதுகாத்து வந்த இன்று நாம் மறந்த விஷயமாகிப்போன கூட்டு குடும்ப குதுக்கலம் பல வகையான இடையுருக்களால் சிதைந்து விட்டன. இன்று நாம் நமக்கென தனி குடித்தனம், தனி வாழ்க்கை என நம்மை நாமே தனிமை படுத்திக்கொண்டோம். ஒரு சில குடும்பங்களில் பெற்றோருடன் இருந்தாலும் அவர்களுடனான நெருக்கம் அதிகமில்லை. நின்று பேச கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டே உள்ளனர். பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள், பணி முடிந்து வீடுவரும் கணவன் மனைவி இவர்கள் மீதம் இருக்கும் நேரத்தை தொலைகாட்சியின் முன்பே கழிக்கின்றனர். ஒரே வீட்டில் இவர்கள் அனைவரும் ஒட்டாமலே வாழ்ந்து வருகின்றனர். இது என்ன வாழ்க்கை? எதற்காக இந்த அவசர வாழ்க்கை?

குழந்தைகளுடனான பாச உறவு, வீட்டு பெரியவர்களுடனான கலந்துரையாடல், உறவினர்களுடனான சந்திப்பு , அக்கம்பக்கதினருடனான உறவு மற்றும் உடனிருக்கும் நண்பர்களுடனான அரட்டை இவையெல்லாம் சிறிது சிறிதாக மறைந்து வருபதற்கு பலவகையான காரணம் இருப்பினும் பெரிதளவு தொலைக்காட்சிகளும், வலைதளத்துடனான கணினியும் நம் பகிர்தலை பாதித்துள்ளது என்பதை மறுக்க முடியாது, மறக்கமுடியாது.

சிலமாதங்களாக ஏற்படும் மின்வெட்டால் ஏற்பட்டுள்ள பதிப்புக்கள் நம் வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டாலும் அதில் உள்ள ஒரே ஆறுதலான விஷயம், ஒரே நன்மை நாம் இழந்த மேற்சொன்ன அனைத்தையும் தற்பொழுது சிறிதளவு காண முடிகின்றது. துள்ளித்திரிந்து விளையாட வேண்டிய வயதில் தொலைகாட்சி மற்றும் கணினி முன்பாக தங்களது வசந்த காலங்களை இழந்த சிறுவர்கள் இன்று வீதியில் துள்ளி விளையாடும் காட்சி பழைய நினைவிற்கு கொண்டுசெல்கிறது. மாலை வேளைகளில் சிறுவர்களின் துள்ளலால் பூங்காக்கள் நிறைந்துள்ளன. நிலா வெளிச்ச இரவில் அங்கேங்கே இருந்து காற்றில் வரும் மெல்லிய குரல்கள் கணீர் என்ற சிரிப்பு சத்தம் என நம்மால் வீதிகளில் கேட்க முடிகின்றது.

வழிப்பாட்டு தளங்கள், உறவினர் இல்லம் மற்றும் பொழுபோக்கு பூங்காக்கள் என விடுமுறை நாட்களில் தனது குடும்பத்தினருடன் வெளியிடங்களில் அதிகநேரம் செலவிடமுடிகிறது. ஏனெனில் பொழுது போக்கிற்கு இருந்த தொலைகாட்சி மின்வெட்டால் தொலைந்துவிட்டது. இவையனைத்தும் அதிக அளவு மின்வெட்டால் பாதிக்கப்பட்ட சிறுநகரங்கள், கிராமங்கள் போன்ற இடங்களில் நம்மால் பார்க்கமுடிகின்றது.

மின்சாரம் இல்லாத வேளைகளில் வீட்டு வாசலில் அமர்ந்து கதை பேசும் பெண்களும், ஆண்களின் அரசியல்,சினிமா அரட்டைகளையும், இளவட்டத்தின் குறும்பு பேச்சுகளும் கேட்க முடிகிறது. நாங்களும் சிறிது நாட்களாக நிலா சோறு உண்டுகொண்டு தான் இருக்கிறோம். சத்தியமாக இது நமது ஆழ் மனதை ஆனந்தப்பட வைக்கின்றது. மீண்டும் ஒரு யதார்த்தமான வாழ்க்கைக்குள் வந்துவிட்டதாக ஒரு பிரம்மை. இவை எத்தனை நாட்களுக்கு என்பது தெரியவில்லை.

வயதானவர்கள் தங்களது பேரன்,பேத்திகளிடம் தங்களது பழைய நினைவுகளையும், நாம் சுதந்திரம் அடைவதற்கு முன் ஆங்கிலேயரிடம் பட்ட துன்பங்களையும், நமது போராட்ட வீரர்கள் பற்றியும் அவர்களின் துணிச்சல்கள் பற்றியும் ஏதோ மடை திறந்த நீரோட்டம் போல் கொட்டி தீர்த்தனர். உண்மையில் நமது சுதந்தர போராட்டத்தை நேரில் கண்டவர்கள் சிலர் தான் உயிருடன் உள்ளனர். அவர்களின் நினைவுகளை பகிர்ந்துகொள்ள நாம் தவறிவிட்டோமோ என தோன்றுகிறது. இவர்களுக்கு பின் இதனை நமக்கு கூற ஒருவரும் இருக்க மாட்டார்கள். இத்தனை நாட்கள் பிள்ளைகளின் கல்வியை பற்றி நினைத்த நாம் இதுபோன்ற சூழ்நிலையை ஏற்படுத்தி தர தவறிவிட்டோமே என தோன்றுகிறது. நினைவுகளை கூறும் போது அவர்களிடமிருக்கும் மகிழ்ச்சியும் உற்சாகமும், கேட்கும் பிள்ளைகளிடமிருக்கும் ஆர்வமும் நம்மை சிறிது கலங்க செய்துவிட்டது. இத்தனை நாள் இதனை தடுத்துவிட்டோமே என்று.

இருப்பினும் தற்பொழுது அனைவரது இல்லங்களிலும் இன்வெட்டர் மற்றும் யூபிஎஸ் பொருத்தப்பட்டு வருவதால் மீண்டும் பழைய நிலை திரும்ப தொடங்கியிருக்கின்றது. என்ன செய்ய அவர்களின் பிள்ளைகளின் கல்விக்கு மின்சார தேவை மிகவும் இன்றியமையாததாக உள்ளது.

இது போன்ற நிகழ்வுகள் சுகமானது என்றாலும் நாம் அதற்கு கொடுத்துள்ள விலை 15 மணி நேர மின்வெட்டு. மின்சாரம் சீராகிறதோ இல்லையோ,நாம் ஏன் வீட்டிற்குள் சிறை வாழ்க்கையினை வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்?. வாரத்தில் ஒருநாளாவது தொலைகாட்சி மற்றும் கணனிக்கு விடுமுறை கொடுத்து விட்டு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். முடியுமா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s