பெண்கள் “பேப்பர்’ படிக்கிறார்களா…

நமது நாட்டுப் பெண்கள் அன்றாடம் செய்தித்தாள்களைப் படிக்கிறார்களா என்று ஒரு ஆய்வு செய்தால் மனதிற்கு மிகவும் சங்கடமான பதில்தான் கிடைக்கும். அப்படியே படித்தாலும் என்ன மாதிரி செய்திகளை, எப்படிப் படிக்கிறார்கள் என்று ஆய்வு செய்தால் அது பல ருசிகரமான தகவல்களைத் தரக்கூடும்.

என்னோடு பணிபுரிபவர்கள், பக்கத்து வீட்டுப் பெண்கள், நெருங்கிய தோழிகள், உறவுக்காரப் பெண்கள் என்று பழகிய பெண்கள் கூறிய வகையில் பார்த்தால், செய்தித்தாள் வாசிப்பவர்கள் மிகவும் குறைவு. சிலர், “தலைப்பு’ச் செய்திகளை மட்டுமே வாசிக்கின்றனர். இன்னும் சிலர் சினிமாச் செய்திகள் படிப்பதிலே ஆர்வம் காட்டுகின்றனர். சிலர் விடுமுறை நாள்களில் மட்டும் படிப்பதுண்டு. இன்னும் சிலர் மத்திய, மாநில அரசுகளின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை மட்டும் தவறாது படிக்கின்றனர்!

அலுவலகப் பெண்கள், தாம் சார்ந்த துறை சம்பந்தப்பட்ட செய்திகள் ஏதும் இருந்து கணவர் ஞாபகப்படுத்தினால் அந்த நேரம் படிக்கின்றனர். மழைக்காலங்களில் தொடர்மழை ஏற்பட்டால், மாவட்ட ஆட்சியர் தமது மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளாரா என்று ஆசிரியைகள் படபடப்புடன் பிரித்துப் பார்கின்றனர்.

சிலர் ஜோதிடப் பலன்களைப் பார்க்க ஆர்வம் செலுத்துவது உண்டு. பொதுவாய் ஜோதிடப் பலன்களில் பெண்களுக்கு என்று ஒரு வரி மட்டுமே பலன் போட்டிருப்பார்கள்; மீதியெல்லாம் ஆண்களுக்கானவை போலும்!

பெரும்பாலும் பெண்கள் அவர்களுடைய குடும்பச் சூழல், வீட்டு வேலை, வேலைக்குப் போகிறவர்களாக இருந்தால் அதற்கும் சேர்த்து தயாராக வேண்டிய கடமை காரணங்களால் சாவகாசமாக செய்தித்தாள் படிக்க முடியாமல் போகிறது.

நமது நாட்டில் அரசியலே “”ஆண்களுக்கு மட்டும்” என்பது போன்ற போக்குதான் பொதுவாக நிலவுகிறது. ஒரு சில பெண் முதல்வர்கள், சில பெண் எம்.பிக்கள், சில எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலான பெண்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள் என்று கூறிவிட முடியாது.

நேரடியான அரசியலுக்கு வருவது ஒரு புறம் இருக்கட்டும். நாட்டில் அன்றாடம் நடக்கும் அரசியல், பொருளாதார மாற்றங்களைக் கூர்ந்து கவனிக்கும் பார்வையாவது பெண்களுக்கு வரவேண்டுமே!

அண்ணா ஹசாரே, அரவிந்த கேஜரிவால், 2ஜி ஸ்பெக்ட்ரம், வதேரா, கூடங்குளம் அணுஉலை உதயகுமார் என்று அன்றாடம் அடிபடும் பெயர்களை முழுமையாகப் படிக்க முடியும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு இளம்பெண் அவளது திருமணம் நடந்ததையொட்டி அரசு அளித்த உதவித்தொகை அடங்கிய கடித உறையை வைத்திருந்தாள். அதில் “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்திட்டம்’ என்று அச்சிட்டிருந்தது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரை தமிழ்நாட்டில் எத்தனை பெண்களுக்குத் தெரியும்? ஏதோ ஒரு திராவிடக் கட்சியின் பெண் தலைவராக இருக்கும் என்றே பலர் நினைக்கக்கூடும்.

இதுபோல, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, கேப்டன் லட்சுமி ஷெகல், தில்லையாடி வள்ளியம்மை என எத்தனையோ வீரப் பெண்களின் வரலாறு பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தினமும் செய்தித்தாள்களை வாசிக்கும்பட்சத்தில் இவர்களைப் பற்றி அவ்வப்போது வரும் செய்திகளைத் தொடர்ச்சியாக அறிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.

பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்கும் அதே நேரத்தில், நாட்டின் அரசியல் நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்கும் போக்கு பெண்கள் மத்தியில் உருவாக வேண்டும். அது இல்லாமல் இருப்பதால்தான் ஆண்கள் தொகுதியை பெண்களுக்கான தொகுதியாக மாற்றும்போது, கணவன்மார்கள் லாலு பிரசாத் பாணியில், தங்களது மனைவிமார்களைப் போட்டியிட வைத்து, வெற்றிக்குப்பின் தங்களது ஆதிக்கத்தில் வைத்துக் கொள்கின்றனர்.

கூடங்குளத்தில் அணுஉலை வேண்டுமா, வேண்டாமா என்ற விவாதம் தினமும் ஊடகங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூடங்குளத்தில் ஏராளமான பெண்கள் தங்களது வாழ்வாதாரம் குறித்த அச்சத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர். பிற பகுதிகளில் உள்ள பெண்கள் இது குறித்து யோசிக்கிறார்களா என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் இது பற்றிய செய்திகளையாவது படிக்கிறார்களா என்றும் தெரியவில்லை.

அணுப்பிளவு குறித்து ஆராய்ச்சி செய்து, அணுப்பிளவின் ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்திய முதல் விஞ்ஞானி மேடம் கியூரி என்ற பெண்மணி. பல அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த ஆண் விஞ்ஞானிகளுக்குப் பக்கபலமாக இருந்து குறிப்புகள் எடுத்துக் கொடுத்ததும் அவர்தம் மனைவிமார்களாக இருந்த பெண் விஞ்ஞானிகளே என்பதும் வரலாற்று உண்மைகளே.

அரசியல், விஞ்ஞானம், மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வருவது வரவேற்கத்தக்க விஷயமே எனினும் அவர்கள் பெண்கள் என்பதாலேயே எல்லாவற்றையும் வரவேற்றுவிட முடியாது. சமூகம் சார்ந்த மதிப்பீடுகளுக்கான அளவுகோல் அவர்களுக்கும் பொருந்தும். அந்த அளவுகோலில் வெற்றிபெற்ற பெண்களே சரித்திரத்தில் இடம்பிடிப்பர். இந்த உண்மையை அறிந்து கொள்ள தொடர்ச்சியான வாசிப்பு வேண்டும். ஆம், பெண்கள் தொடர்ச்சியாக செய்தித்தாளை வாசித்தால் மட்டுமே இது சாத்தியம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s