சமூக வலைத்தளமான டிவிட்டரில் இன்று அதிகம் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளான வலைத்தளம் ஐ.ஆர்.சி.டி.சி. தளம்தான்!
ரயில்வே பயணச்சீட்டு பதிவுசெய்யும் தளமாகத் திகழ்கிறது இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக இணைய தளமான ஐ.ஆர்.டி.சி. தளம். இந்தத் தளத்தில், இன்று காலை தீபாவளிப் பண்டிகையை ஒட்டி அதிகம் பேர் பதிவு செய்யக் காத்திருந்தனர். ஆனால், வழக்கம்போல் பொறுமையைச் சோதித்தது இந்தத் தளம்.
பொதுவாகவே, காலை 10 மணிக்கு தத்கல் பயணச் சீட்டு பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி தளத்தைத் திறந்து விட்டு அமர்ந்தால் போதும், பதிவு செய்பவரை டென்ஷனின் உச்சத்திற்கே அழைத்துச் சென்று விடும். அதுவும் ரத்த அழுத்தம் உள்ளவர் என்றால் அவ்வளவுதான்… தளம் வேலை செய்யாது, அல்லது திறக்கவே திறக்காது. இல்லாவிடில் ஒரே பக்கத்தில் வெகு நேரம் நின்று கொண்டிருக்கும். அதற்குள் பயணச் சீட்டுகள் அதிகம் பதிவாகி முடிந்துவிடும்.
இணையதளம் வழியே ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் இத்தகைய அனுபவத்தைப் பெற்றவர்கள் மிக அதிகம்.
இந்த நிலையில், தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, வெளியூர்களுக்குச் செல்வோர் இன்று காலையில் 10 மணிக்கு கணினி முன் அமர்ந்து ஐ.ஆர்.சி.டி.சி தளத்தைத் தட்டிவிட்டு அமர்ந்தனர். அதன் விளைவை அவர்களின் டிவிட்டர் பதிவுகள் இன்று வெளிப்படுத்தின.
டிவிட்டரில் ஐஆர்சிடிசியின் சர்வர் வேகம், முடிவடையாத பரிவர்த்தனைகள், தளம் திறக்காத தன்மை உள்ளிட்ட சில குறித்து கேலியும் கிண்டலும் மிகுந்திருந்தன.
2002ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐஆர்சிடிசி சேவை, பத்து ஆண்டுகளில் தற்போது பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. அவ்வப்போதைய அரசின் மாற்றங்களுக்கு உட்பட்டும், அமைச்சர்களின் பரிந்துரைகளுக்கு உட்பட்டும் நேர மாற்றங்களும் நடந்துள்ளன. முன்னர் காலை 8 மணியாக இருந்த பயணச்சீட்டுப் பதிவுகள், தற்போது 10 மணியாக ஆக்கப்பட்டுள்ளது. இதில், முகவர்களுக்கு தனி நேரம் வேறு!
தற்போது தத்கல் பயணச் சீட்டு பதிவுக்கு காலை 10 முதல் 12 மணிக்குள்- ஒரு நாளைக்கு ஒருவர் இரு முறை ஐஆர்சிடிசியில் பதிவு செய்ய பயன்படுத்த முடியும். ஆனால், ஒரு பயணச் சீட்டைப் பதிவு செய்வதே குதிரைக் கொம்பு என்று ஆகிவிட்டது.
இத்தகைய சூழலில் இன்று ஐஆர்சிடிசி குறித்து டிவிட்டரில் பதியப் பட்டுள்ள கருத்துகள் அந்தத் தளத்தின் “புகழை”ப் பறை சாற்றுகிறது…
சில கருத்துகள்:
#அதனால்தான் அத்வானிஜி அவருடைய சொந்த ரத யாத்திரைக்கு ஐஆர்சிடிசிஐ தேர்ந்தெடுத்தார்
# ஐஆர்சிடிசி என்ன பயணச்சீட்டு இல்லாத பயணத்தை வலியுறுத்துகிறதா?
# ஐஆர்சிடிசியின் டேக் லைன் “இந்தப் பக்கம் தற்போது கிடைக்கப்பெறாது” என்பதுதான் என்று பெரும்பாலான மக்கள் கருதுகிறார்கள்.
# சர்வர் ஆஃப் த இயர் என்று போடலாம்.
# ஐஆர்சிடிசி என்பது இந்தியன் ரயில்வே கான்ச்ப்ட் ஆஃப் டார்ச்சரிங் சிட்டிஸன்.
# மிகப் பெரிய பயங்கரமான ஆன்லைன் விளையாட்டு.
# இன்றைய உங்கள் அதிர்ஷ்டத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? ஐஆர்சிடிசி தளத்தில் நுழையுங்கள்!
# சூடான செய்தி: இன்று மாலை 5 மணிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஐஆர்சிடிசி குறித்தும் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் குறித்தும் பகீர் தகவல் அளிப்பார்.
மேலும் தெரிந்து கொள்ள டிவிட்டர் தேடலில் IRCTC என்று தகவல் இட்டுப் பார்க்கலாம்!